Wednesday, 25 December 2019

YANA CAVE - ஒரு பயணம்

     இந்தியாவின் மேற்கு கடற்கரை 5 க்கும்( malpe beach ,murudeshwar temple beach ,kudle beach ,om beach and paradise beach )மேற்பட்ட அழகிய கடற்கரைகளை பார்த்துவிட்ட எங்களுக்கு ஒரு நட்பின் மூலம் yana cave பற்றி தெரிந்தது.
        யானா (Yana) என்பது கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டமான கும்தாவின் காடுகளில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும், இது அசாதாரண கார்ட் பாறை ( karst rock formations)அமைப்புகளுக்கு பெயர் பெற்றது.  இது மேற்கு தொடர்ச்சி மலையின் சஹ்யாத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ளது.

அவர்
 "if you have lots of money, go to Gokarna, if you have guts, go to Yana"என்றார்.
அவரின் வார்த்தைகள் எங்களுக்கு ஆர்வத்தை தூண்டியது.
       நானும் பிரியாவும் காலை 6.30 மணிக்கு  சென்றுகொண்டு இருக்கிறோம். வழி தெரியாது ஆனால் Google Map இருக்கும் நம்பிக்கையில் கிளம்பிவிட்டோம்.
gokarna பேருந்து நிலையத்திலிருந்து 50 கி.மீ  ஸ்கூட்டர்( Rental scooter) பயணம் .
23 கி.மீ NH la போனதும்  மலை ரோடு ஆரம்பிக்கும் .
ரொம்ப அதிகமா வண்டிகள் இல்லையென்றாலும் சில  பஸ், லாரி , கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் எங்களை கடந்து போனது. நாங்கள் சென்றது sirsi/karwar/yana- Hubli high way ஆனாலும் அவ்வளவாக மனித நடமாட்டம் இல்லை .ஒரு இடத்தில் செக் போஸ்ட், அதை சுற்றிலும் உயர் ரக உணவு விடுதி ,சின்ன சின்ன கடைகள் மற்றும்  வீடுகளும் இருந்தன . ஒரு சில இடங்களில் ரோடுகள் மோசமாக இருந்தது . மேலும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒருவரிடம் வழி கேட்டோம்.
இடதுபுறம்  yana cave செல்லும் வழியை காட்டினார். நேராக சென்றால் sirsi - kumta ரோடு .


          இடதுபுறம் திரும்பி 15 கி.மீ பயணம் .இந்த பயணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பயணம். இதயத்தில்  சரியான வழியா அல்லது தவறான வழியா என மாறி மாறி தோன்றியது இன்பத்தையும் வலியையும் ஒரே நேரத்தில் அனுபவித்தேன்.ஆள் அரவமற்ற பாதை. பெயர் பலகை கூடாத இல்லாத ஒரு இடம் .இந்த வழி நெடுக நாங்கள் பார்த்த மனிதர்கள் மொத்தம் 5 நபர்கள் மட்டுமே அதுவும் நாங்கள் 10 km பயணத்துக்கு பின்பு எங்களை ஆட்டோவில் கடந்து போனார்கள். நெட்வொர்க் சுத்தமாக இல்லை . Google சில சமயம் தவறாக கூட வழி காட்டும் என்று பயம் வேறு
          சூரியன் அப்போது தான் எழுந்தது போல ஒளி கதிரை மரங்களுக்கு இடையே வீசிக்கொண்டு இருந்தான். காட்டு பறவைகளின் சத்தம் ,உடலை துளைகின்ற குளிர்ந்த காற்றின் தீண்டல்,எங்கள் ஸ்கூட்டர் சத்தம் இது மட்டுமே எங்கள் வழி துணை. பாதை நீண்டு கொண்டே போகிறது.எவ்வளவு தூரம் வந்துவிட்டோம் என்று கூட தெரியவில்லை. சரி ஆனது ஆகட்டும் என்று போய்க்கொண்டே இருந்தோம். ஆனாலும் இது ஒரு புதிய அனுபவம் பயம்  கலந்த சந்தோசமாக இருந்தது.
          சுமார் 10 km(approx) போய் இருப்போம் எங்களுக்கு பின்னால் ஆட்டோ சத்தம் அதில் இருந்தவர்களிடம் வழி கேட்டோம் .இப்படியே நேரா போங்க என்றார். அந்த ஆட்டோ டிரைவர்க்கு எங்களுடன் டிரைவ் பண்ண ஆசை போல எங்களுடனே அவரும் சிரித்துகொண்டே சிறிது தூரம் வண்டி ஓட்டி வந்தார் . பிறகு இடது புறம் செல்லும் சாலையில் திரும்பி சந்தோசமாக கை அசைத்து சென்றார் .மீண்டும் 4 கி.மீ மேல் போய்க்கொண்டு இருக்கிறோம் .ஒரு ஓடை சத்தம் கேட்டதும் வந்துவிட்டோம் என்று நிம்மதியாக இருந்தது.
நாங்கள் வந்த பாதையின் முடிவில் பஸ்கள் நிறுத்த கூடிய அளவில் பார்க்கிங் இருந்தது . அருகில் ஒரு டீ கடை .அங்கு நிறைய மனிதர்கள் இருந்தார்கள்.

    இரு சக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்ய 10 ரூபாய் வாங்கப்படுகிறது.தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கி கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.
yana பார்க்கிங்ல இருந்து சுமார் இரண்டு கி.மீ நடை பயணம் .பாதி வழி மட்டும் டிரெயில் ரூட் மீதி எல்லாம் படிக்கட்டுகள், ஆங்காங்கே awareness பலகை, குப்பை தொட்டிகள் , பார்க்கில் இருபது போல அமருமிடம் என பாதைகள் சுத்தமா இருந்தது.அவ்வபோது அங்குள்ள பணியாளர்கள் சுத்தம் செய்துகொண்டே இருந்தனர் .



         செல்லும் பாதையில் சிறிய ஓடைகள் குறுகிட்டன அதில் விளையாடிகொண்டே நடக்க வலது புறத்தில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது .
மேலும் மேலே சொல்ல இடது புறத்தில் ராக் தெரிந்தது .இது யான cave போலவே ஆனால் சிறியது . இதை பார்த்துக்கொண்டே செல்ல மூச்சு வாங்கியது . கடைசியில் yana cave வை பார்த்துவிட்டோம்.



     இயற்கை எப்பவும் தனித்துவமானது அதற்கு பொருத்தமான ஒன்று Yana cave . பைரவேஸ்வர ஷிகாரா மற்றும் மோகினி ஷிகாரா என அழைக்கப்படும் இந்த இரண்டு பிரம்மாண்டமான பாறைகளுக்கு யானா பிரபலமானது.என் கண்முன்னே பிரமாண்டமான கருப்பு பாறை . பாறையை என்னை பார்த்தல் எறும்பு மாதிரி கூட தெரியமாட்டேன்😂😂.


         பாறையை சுற்றிலும் காடு, பாறையின்(ஷிகாரா) கீழ் ஒரு குகை கோவில் உள்ளது.இந்த குகைக் கோயிலால் தான் யானா ஒரு புனித யாத்திரை தளமாகவும் இருக்கிறது,இந்த  கோவிலின் பிரஹரத்துள் சென்று தான் நாம் குகை வாசலுக்குள் செல்ல முடியும் . பிரமாண்டமான குகை ஒரு வழியில் சென்று மறு வழியில் வெளியேறலாம்.இது கோவிலை சுற்றி வழிபட  யாத்திரை வழியாக பயன்படுத்துகின்றனர்.


         அரைமணி நேரம் சுற்றிவிட்டு திரும்பிவிட்டோம். Yana பார்க்கிங் வர 11 மணி ஆகிவிட்டது.திரும்பவும் 2 மணிநேர காட்டு வழி பயணம்.ஆனால் இப்போது பயம் இல்லை . நிறைய வாகனங்கள், டூர் பஸ்கள் எங்களுக்கு எதிர் திசையில் யானவை (Yana) பார்க்க சென்றன .
    ஸ்கூட்டரில் 100 கி.மீ மேல் மலை பயணம். எல்லா பயணமும் மறக்கமுடியாத பயணம்தான் ஆனால் கொஞ்சம் பயமான பயணம் இதுதான். மொழி தெரியாத,பெயர் பலகை இல்லாத ஊர், மனித நடமாட்டம் இல்லாத காட்டு பாதை, ஆனால் எனக்கு இது ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுத்தது .

Saturday, 3 August 2019

ஹம்பி- UNESCO World Heritage Site

ஹம்பி

ஹம்பிக்கு என்னுடைய மழைகால பயணம் எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இது எனது முதல் பயணம் ஏனெனில் என்னுடைய மிகச்சிறிய வயதில் அம்மாவுடன் வந்திருக்கிறேன் .

           சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் இங்கு அழகானது .இதை பார்பதற்கு பலர் வருகின்றனர் . போட்டேகிராப்பர்ஸ் மற்றும் டிராவலர்ஸ்கு ஒரு காட்சி விருந்து. இதை பற்றி google தேடிய போது நிறைய படங்கள் கண்ணில் பட்டது ஆனாலும் எனக்கு மழை காலத்தில் ஹம்பியை பார்க்க தோன்றியது ஏனெனில் மழையும் ஹம்பியும் ஒரு அரிய கலவையாகும்.

         ஒரு வாரத்தில் டிக்கட் புக் செய்து கிளம்பிவிட்டேன் . அப்போது தான் மேற்கு தொடர்ச்சி மலையில் பருவமழை ஆரம்பித்த நேரம் ( இப்பொழுது வரை மழை நிற்கவில்லை ) வல்லமை வாய்ந்த துங்கபத்ரா அணை நிரம்பும் நேரம் ஆகஸ்ட் 1 மதியம் இரயில் பயணம் திருப்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு மேஜஸ்டிக் இரயில் நிலையம் சென்றடைய வேண்டிய இரயில் இரண்டரை மணி நேர தாமதம் .

அக்காவின் வீடு ஹோஸ்பேட்டில் இருப்பதால் அங்கிருந்து சுற்றி பார்க்கலாம் . அவர்கள் தோட்டம் துங்கபத்ரா அணைக்கு பக்கம் தான் . Bangalore  சென்றதும்  ஹோஸ்பேட் செல்லும் KSRTC பஸ்சை பிடித்து இரண்டுநபர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்து கொண்டேன் .

One day Hampi

       யுனெஸ்கோ பாரம்பரியத்தின் புகழ்பெற்ற ஹம்பியின் அழகிய மற்றும் கனவான நிலப்பரப்பு என்னை புராண சகாப்தத்திற்கு கொண்டு சென்றது, நாங்கள் கேட்டு வளர்ந்த ராமாயண கதைகளுக்கு. நான் கண்களைத் திறந்தபோது, ​​இடைக்கால இடிபாடுகளுடன் கூடிய நிலப்பரப்பு என்னை வரவேற்றது .

          விஜய நகர பேரரசுக்ளின் தலைநகராக இருந்த ஹம்பி நகர் முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது ஒரு காலத்தில் செல்வமும் மகிமையும் நிறைந்த ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட இடமாக இருந்தது, முகலாய சுல்தான்கள் சிறப்புமிக்க இந்த ஹம்பி நகரம் வரலாறுகளில் இடம்பிடித்துவிடக்கூடாது என்று இங்கிருந்த அரிய சிலைகள், கோவில்கள், அரண்மனைகள் எல்லாவற்றையும் மண்ணோடு மண்ணாகிவிட்டனர்.இப்போது இருக்கும் சிதிலமடைந்த கோவில்கள் , கட்டிட இடிபாடுகளின் மிச்ச மீதிகள் தான் பழம் பெரும் வரலாற்று கதைகளின் மௌனச்சாட்சிகள்.

     ஹம்பியை சுற்றி பார்பதற்கு 350 முதல் 400 / - வரை வாடகை பைக்குகள் இருக்கிறது. இருப்பினும், நீங்கள் கோயில் பக்கத்தில் பைக்குகளை ஓட்ட முடியாது. நீங்கள் பைக்கைப் பயன்படுத்தி அனுமன் கோயில், அனேகுண்டி, சனபூர்லேக் போன்றவற்றுக்குச் செல்லலாம்.மற்றும் சைக்கிள் பயணம், டுக் டுக் மூலமாகவோ கோயில்களை சுற்றலாம் அல்லது ஒரு ஆட்டோ பையன் ஒரு முழு நாள் சுற்றுப்பயணத்திற்கு ரூ .700 முதல் 1000/ - வசூலிப்பார். அதும் வெளிநாட்டவர்களாக இருந்தால் 2000 வரை வாங்குகிறார்கள்.

  முதலாவதாக விருபக்ஷ கோயில்:-



   இந்தியாவின் மிகப் பழமையான கோயில்களில் இதுவும் ஒன்றாகும், இது சிவன் கோவில்.  இந்த கோயில் ஹம்பியில் புனித யாத்திரைக்கான முக்கிய இடமாகும்.
காலை 7-8 மணியளவில் கோவிலுக்கு சென்றால் அந்த நேரத்தில், காலை ஆரத்தி மற்றும் "லட்சுமி" என்ற யானை தனது தினசரி குளியலுக்கு ஆற்றை நோக்கி நடந்து செல்வதையும் நீங்கள் காணலாம்.விருபக்ஷ கோயிலுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை, அது ஹம்பி பஜாரை ஒட்டியுள்ளது. இங்கு இருந்து ஆட்டோ எடுத்து கொண்டோம் 500 ரூபாயில்      விநாயகரை தரிசிக்க சொன்றோம் .
         
 சசிவேகலு விநாயகர் கோயில்:-




அடுத்ததாக விநாயகர் சிலை  சிதிலமடைந்த நிலையிலும் பிரமாண்டமாக காட்சியளித்தது .சசிவேகலு விநாயகர் கோயில் ஒரு பெரிய பாறையிலிருந்து செதுக்கப்பட்ட விநாயகர் சிலை.  இது ஹம்பியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.  சசிவேகலு விநாயகர் சுமார் 8 அடி (2.4 மீட்டர்) உயரம் கொண்டவர்.

விட்டாலா கோயில்:-




கல் தேர்

இசை தூண்


குளத்தின் நடுவில் கோவில்

விட்டாலா கோயில் ஒரு பெரிய கோயில் வளாகத்துடன் பாழடைந்த நகரத்தின் மையப்பகுதியாகும்.  இது விஷ்ணு (விட்டாலா - பகவான் விஷ்ணுவின் மற்றொரு வடிவம் ) கோவில்.விட்டலா கோயிலை அடைய சிறந்த வழி துங்பத்ரா ஆற்றங்கரை மலையேற்ற பாதை வழியாகும் .  இது சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைதியான நடைப்பயணமாக இருக்கும்.நடக்க முடியாதவர்கள் டுக் டுக் இல் செல்லலாம் .இந்த பாதையில் ஒரு குள கோவில் , மற்றும் இடிந்த கட்டிடங்கள் , கற்பாறைகள்  உள்ளன.
       இது அற்புதமான கட்டிடக்கலை, பிரபலமான கல் தேர் ( ரூபாய் நோட்டில் உள்ள தேர் )மற்றும் மர்மமான இசை தூண்களுக்கு பெயர் பெற்றது. மேலும் இங்கு பழமையான மரம் உள்ளது.
     
 நுழைவு கட்டணங்கள்:

 இந்தியன் - ரூ .50.
 வெளிநாட்டு - ரூ .500.
 அதே டிக்கெட்டை தாமரை மஹால் மற்றும் எலிஃபண்ட் ஸ்டேபிள் பார்க்க பயன்படுத்தலாம்.

லட்சுமி நரசிம்ம மற்றும் படவி லிங்கா:-



        லட்சுமி நர்ஷிமா ஹம்பியில் உள்ள மிகப்பெரிய சிற்பமாகும், இது உக்ரா (திகிலூட்டும் வடிவம்) நரசிம்ம என்றும் அழைக்கப்படுகிறது.  படாவி லிங்கா என்பது ஹம்பியில் உள்ள மிகப்பெரிய லிங்க சிலை மற்றும் அதன் வழியாக ஒரு நீர் வழித்தடம் செய்யபட்டு இருப்பதால்  எப்போதும் நீரிலே இருப்பார்.



     படவி லிங்காவும், லட்சுமி நரசிம்மமும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன, அவை ஹேமகுட்டா மலையிலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரம்.  இந்த இரண்டு நினைவுச்சின்னங்களுக்கும் நுழைவு கட்டணம் இல்லை.
   
நிலத்தடி சிவன் கோயில்




 1442 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பதலேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் நிலத்தடி சிவன் கோயில் ஆகும். இது காலை 8.30 மணிக்கு திறக்கப்படுகிறது.  இது தரை மட்டத்திற்கு கீழே கட்டப்பட்டதால் இது நிலத்தடி கோயில் என்று அழைக்கப்படுகிறது.  இப்போது இது போன்ற நிலத்தடி இல்லை.  கோயிலின் சன்னதியும் மையப் பகுதிகளும் எப்போதும் தண்ணீருக்கு அடியில் இருக்கும்.  கோயிலின் மையப் பகுதிக்குள் நுழைவதை நீர் தடை செய்கிறது.  நீர் மட்டத்தைப் பொறுத்து நாம் கருவறைக்குள் நுழையலாம்.  இப்போது இங்கு தண்ணீர் இல்லை வவ்வால் அதிகம் இருக்கிறது இதனால் மோசமான வாசனை அடிக்கிறது .
அடுத்ததாக கிருஷ்ணா கோயில்

கிருஷ்ணா கோயில்

 ஹம்பியில் உள்ள கிருஷ்ணா கோயில் நேர்த்தியான செதுக்கல்களுக்கும் (குறிப்பாக, புராண சிங்கங்கள்) மற்றும் நேர்த்தியான கட்டடக்கலை வடிவமைப்பிற்கும் பெயர் பெற்றது.  கோயிலின் ஆடம்பரம் விஜயநகர சாம்ராஜ்யத்தின் செழிப்பை பிரதிபலிக்கிறது.  இந்த கோவிலுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை, லட்சுமி நரசிம்ம சிலையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது.

  தாமரை கோவில் :-




தாமரை மஹால் ஹம்பியில் உள்ள மற்ற முக்கிய கட்டமைப்புகளைப் போலல்லாமல், இது சுண்ணாம்பு  மற்றும் செங்கல் லில் தயாரிக்கப்பட்ட கலவையால் ஆனது.கட்டிடத்தின் வடிவத்தை வைத்து இதை தாமரை மஹால் என்று அழைக்கபடுகிறது . மேலும் இதை  சித்ரங்கனி மஹால் மற்றும் கமல் மஹால் என்றும் சொல்கின்றனர் .ஹம்பியில் மிகவும் அதிகமாக ஃபோட்டோ எடுக்கப்பட்ட கட்டிடங்களில் இதும் ஒன்றாகும்.  தாமரை மஹாலைச் சுற்றி ஒரு பெரிய புல்வெளி உள்ளது.பின்னல் ஒரு பழைய கிணறு உள்ளது

எலிஃபண்ட் ஸ்டேபிள்:-



ஹம்பியில் குறைந்த பட்சம் அழிக்கப்பட்ட கட்டுமானங்களில் ஒன்றான எலிஃபண்ட் ஸ்டேபிள் ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகும்.  வரிசையான  அறைகளைக் கொண்ட இந்த நீண்ட கட்டிடம் அரச யானைகளை ‘நிறுத்த’ பயன்படுத்தப்பட்டது.  11  உயரமான அறைகள் உள்ளன;  அவற்றில் சில ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.  இந்த மைய மண்டபத்தைப் பொறுத்தவரை முழு கட்டிடமும் சமச்சீராகத் தெரிகிறது.  மத்திய மண்டபத்தின் கோபுரம் கோயில்களைப் போலவே (பெரும்பாலும் அழிக்கப்பட்டாலும்) ஒத்திருக்கிறது.  இருப்பினும் இருபுறமும் ஐந்து ஜோடி குவிமாடங்கள் இஸ்லாமிய பாணியில் உள்ளன.உள்ளே கூரையில் உலோக கொக்கிகள் (யானைகளை கட்ட பயன்படுகிறது) காணலாம்.

குயின்ஸ் குளியல்



விஜயநகர அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்காக மன்னர் அச்சுதா ராயாவால் கட்டப்பட்ட குயின்ஸ் பாத்.  குயின்ஸ் பாத் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், இது ராஜா மற்றும் அவரது ராணிகளின் தனிப்பட்ட குளியல் அறையாக பயன்படுத்தப்பட்டது.  கட்டிடம் அதன் மகிமையை இழந்துவிட்டது.  குயின்ஸ் பாத் இந்தோ-இஸ்லாமிய பாணியிலான கட்டிடக்கலையில் கட்டப்பட்டது.  மத்திய குளியல் பகுதி மேற்கூரை இல்லாமல் திறந்திருந்தது .
குளியல் பகுதி ஜன்னல் போன்ற பால்கனிகளால் சூழப்பட்டுள்ளது. அகழியைக் கடந்து குளியல் அடைய ஒரு பாலம் உள்ளது.  அடுத்தாக மகானவாமி திப்பா மற்றும் புஷ்கர்னி டேங்க் கை பார்க்க சென்றோம். இவை தான்
 ஹம்பியில் எங்கள் கடைசி இலக்கு

மகானவாமி திப்பா


  மகானவாமி திப்பாவை( Mahanavami Dibba)பார்வையிட்டோம்.  கன்னடத்தில் “திப்பா” என்ற சொல்லுக்கு “உயர் மட்ட மேடை அல்லது உயர் தரை” என்று பொருள்.  அரச அரண்மனை பகுதியில் இது மிக உயரமான அமைப்பு.  மஹானவாமி திருவிழா என்று மத ரீதியாக அழைக்கப்படும் 9 நாட்கள் நீடித்த அற்புதமான திருவிழாவை கொண்டாட இது மன்னர்களால்  பயன்படுத்தப்பட்டது.  திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இராணுவ அணிவகுப்பு-கடந்த காலம், போர் விளையாட்டுக்கள் மற்றும் அரச ஊர்வலங்களைக் காண அரசர் இந்த அலங்கார மேடையில் அமர்ந்திருப்பார்.



வேட்டைக்காரனின் சிற்பங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள், புராணத்திலிருந்து வரும் விலங்குகள்  இங்கே காணப்படும் சில அழகான சிற்பங்கள்.
  இதன் அருகில் தான் புஷ்கர்னி டேங்க் அமைந்து உள்ளது.இந்த தொட்டி 22 மீ அகலமும் 7 மீ ஆழமும் கொண்டது,  1981 ஆம் ஆண்டில் ASI இன் உறுப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டது.  கட்டுமானமும் வடிவமைப்பும் அற்புதம்.  அதற்குள் என்னுடைய போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டதால் ஃபோட்டோ எடுக்க முடியவில்லை.

இதுபோல் இன்னும் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன . இவற்றின் பெயர் மற்றும் இடங்கள் ஒரு மேப் இல் இணைத்துள்ளேன் .


Friday, 3 May 2019

உத்தரகாண்ட் ( Kuari pass & pangarchulla peak ) trek - part 4(The End)



      நான் எழும் முன்னரே அனைவரும் எழுந்து இருந்தனர்.ஸ்லீப்பிங் பேகில் இருந்தபடியே மணி ரெண்டு ஆகிருச்சா சோனம்??? என்றேன்.
சிரித்தவள் மணி ஒன்பது ஆச்சு என்றாள்.
அய்யோ நாம ரெண்டு மணிக்கெல்லாம் கிளம்பிருக்கனுமில்ல??? ஏன் இன்னும் கிளம்பல??

வெளிய பனி மழை பேஞ்சுட்ருக்கு, வழி எதுவும் தெரியல, பங்கர்சுவாலாவை கூட காணல..

பனி மழையா? நிஜமாவா??

ஆமா... மோகனோட பாறை கிச்சனை கூட காணல...




மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தேன்...மூச்சு விட மறந்து விட்டேன். கூடாரத்தின் வெளியே பனி  3 inch அளவிற்கு நிரம்பிருந்தது,கருமேகங்கள் சூழ பனி மழை பொழிந்து கொண்டிருந்தது.
பனிமேல் நின்று உரக்க கத்தினேன், அதற்குள் காபி வர பனியில் நனைந்து கொண்டே காபி குடித்தேன்.
சொர்க்கம் இப்படித்தான் இருக்குமென நினைத்துக்கொண்டேன். சிறிது நேரம்தான் சூரியக்கதிர்கள் வெளிவர ஆரம்பித்தன. பயணத்தை தொடரலாம் என எண்ணுவதற்குள் மறுபடியும் பனிமழை ஆரம்பித்தது .மின்னல்களும் அவ்வப்போது எட்டிப்பார்க்க பயணம் தடைபட்டது . இப்படியே ஐந்து நிமிடத்திற்கொரு முறை காலநிலை மோசமாகிக்கொண்டே வந்தது.



         
       Chainsingh குலரா முகாமிற்கு  நாங்கள் திரும்ப வேண்டும்  என்று கூறினார்.இவ்வளவு தூரம் வந்து சப்மிட்டை நெருங்காமல் திரும்பி செல்வது சங்கடமாக இருந்தது எங்கள் சோக முகங்களை பார்த்து, 10 அல்லது 11 மணி வரை வானிலை பார்க்கலாம் என்றார்.மணி 9 இருக்கும் வானம் முற்றிலும் தெளிவாக இல்லை ஆனால் மின்னல் நின்றிருந்தன பனிமழையும் இல்லை காற்றின் வேகமும் வெகுவாக குறைந்திருந்தது.நாங்கள் இந்த சந்தர்ப்பத்தை விடுவதாக இல்லை .சப்மிட்டை பார்க்க கிளம்பிவிட்டோம்.



        மணி 9.35... பிரட் , சிப்ஸ், முட்டை மற்றும் ஆப்பில் வைத்து முதல் நாள் இரவு பேக் செய்திருந்த டேபேக்கை மட்டும் எடுத்துக் கொண்டோம் . மற்றும் இதர உடமைகளை பேக்பேக்கில் வைத்துவிட்டு கிளம்பினோம். பனியில் உறைந்து போகாமல் இருக்க கிளவுஸ் உபயோகப்படுத்தினேன்.பங்கர்சுலா எங்களுக்கு இடதுபக்கம் தெரிந்தது. ஒருபுறம் சரிவு மறுபுறம் பள்ளத்தாக்கு நடுவில் உலர்ந்த புல் பாதையில் ஏறிக்கொண்டிருந்தோம். மேலே செல்ல செல்ல குளிர் காற்று அடிக்க ஆரம்பித்தது நாங்கள் செல்லும் திசையில் எதிர் காற்று அடித்ததால் நடப்பதற்கு கொஞ்சம் இலகுவாகும் பயமாகவும்  இருந்தது .

           இரண்டு  மூன்று ரிட்ஜ்களை கடந்து ஒரு இடத்தில் காலை உணவை எடுத்துக் கொண்டோம் .அங்கிருந்து பார்பதற்கு எதிர்புறம் உள்ள மலைகளின் அழகு நம் மனதில்  மகிழ்ச்சியை கரை புரண்டோட செய்கிறது. இடதுபுறம் முதல்நாள் கடந்து வந்த குவாரி பாஸ் பனி நிறைந்திருந்தது . எங்கள் மலையேற்றம் தொடர்ந்துகொண்டிருந்தது..மிதந்து செல்லும் நீலவானமும் , வெள்ளை மேகமும் தன் அழகிய காட்சிகளால் கண்களை குளிர்வித்தது .



     
         
 1 1/2 மணி நேரத்திற்கு பிறகு மினி பங்கர்சுலாவை கடந்து பங்கர்சுலாவை நோக்கி நடந்தோம். மிகவும் செங்குத்தான பனிமலையில் பக்கவாட்டில் கடினமான பனியில் நடந்துகொண்டிருந்தோம் .ஒவ்வொரு அடியையும் ஒரு பள்ளத்தை உருவாக்கி அதில் பேலன்ஸ் செய்து நடந்தோம்.எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்த ஜித்து திடீரென பனியில் கால்தவறி சரிந்தார்.அவருக்கு எதுவும் ஆகவில்லை நன்றாக இருக்கிறார் என்று தெரிந்த பிறகு பனி மலையின் மேல் பகுதியில் கூடுதல் கவனத்துடன் நடக்க ஆரம்பித்தோம் . அவர் அடிபகுதியிலிருந்து முன்னேறிக்கொண்டிருந்தார் .


          ஓர் இடத்தில் ஜித்து எங்களுடன் இனைந்தார் . அது பங்கர்சுலாவின் அடிபகுதி .இன்னும் ஒரு சில மணி நேரங்களில் பங்கர்சுலாவின் சப்மிட் செய்துவிடுவோம் . மதிய உணவை (எக் ,ஜூஸ் மற்றும் ஆப்பிள் )முடித்துவிட்டு எங்களது இலக்கின் கடைசி பனிமலை பங்கர்சுலாவின் உச்சியை அடைய முடிவெடுத்தோம்.


          சாப்பிட ஆரம்பித்து ஒரு சில மணித்துளிகளில் மேகம் எங்களை சூழ்ந்தது. திடீரென்று ஏற்பட்ட மாற்றத்தால் செய்வதறியாது திகைத்து நின்றோம் .சூரியன் மறைந்து விட்டான், கருமேகங்களுக்குள் லேசான பனி தூறல் ஆரம்பித்தது. இனிமையான வானிலை விடைபெற்றது.


              Chainsingh பனிபுயல் ஆரம்பித்துவிடும் இனிமேல் சப்மிட் செய்ய இயலாது நாம் குலாரா பேஸ்கோம்ப் திரும்ப வேண்டும் என்றார். யாருக்கும் மனமில்லை , இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது பங்கர்சுலாவின் முகடு கண்முன்னே... ஆனால் இயற்கையின் முடிவு வேறாக இருந்தது .எல்லா நண்பர்களிடமும் ஒரு இனிமையான உணர்வு இல்லை. நாங்கள் தொடர்ந்து முன்னேற முயற்சித்தோம்,  கிராம்பன்ஸ் வரவில்லை நாங்கள் உடல் ரீதியாக தயாராக இருந்தோம், ஆனால் இயற்கை இல்லை.
அதற்குள் எங்கள் வலது கன்னத்தில் பனியின் ஒரு அடுக்கு உருவாகி இருப்பதை உணர முடிந்தது.நிறைய எண்ணங்கள் எங்கள் மனதில் ஓடியது ,Chainsingh முடிவு எடுத்துவிட்டார் கிளம்ப வேண்டும் அதுவும் மிக வேகமாக.  அதற்குமேல் செயின்சிங்கிடம் கேள்வி கேட்க விரும்பவில்லை. வானிலை மேலும் எந்த வாய்ப்பையும் காட்டவில்லை .கடைசியில் நாங்கள் செய்ததெல்லாம் பனியை ஆழமாக வெறித்துப் பார்த்துவிட்டு கிளம்பியது தான்.


          சில நேரங்களில் இயற்கையானது நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத விபத்துகளை ஏற்படுத்தலாம் . Chainsingh ரெயின் கோட்டை உபயோகப்படுத்த சொன்னார். ரெயின் கோட் மாட்ட போராடினேன். கடுமையான காற்று எங்களை பின்னால் இருந்து தள்ளிவிட்டது, நாங்கள் ஓட வேண்டும், சரிய வேண்டும், கீழ்நோக்கி உருள வேண்டும் என்றார் .செயின்சிங எங்களுக்கு (Sliding ) ஸ்லைடிங் பண்ண கற்றுக்கொடுத்தார் . முதலாவதாக செயின்சிங் என்னை பற்றி யோசித்தார், என்னால் தனியாக ஸ்லைடிங் பண்ணமுடியும் என்றேன்.அவர் பதிலுக்கு காத்திருக்கவில்லை என்னுடைய முதல் ஸ்லைடிங்கை ஆரம்பித்தேன்.


         இந்த பனி ஸ்லைடிங் தீம் பூங்காக்களிள் குழந்தைகள் ஸ்லைடு பண்ணுவதை நினைவுபடுத்தியது .ஒரு பெரிய 400-500 மீட்டர் பனிமலையின் கீழே சறுக்கி செல்ல வேண்டியிருந்தது. இது போல் நாங்கள் இரண்டுநாட்களாக கடந்த அனைத்து பனிமலைகளையும் சறுக்கி கடக்க ஆரம்பித்தோம். பங்கர்சுலா வெகு விரைவாக பின்னே சென்றது .முந்தைய நாள் இருந்த பங்கர்சுலா பேஸ்கேம்பிற்கு வந்து எங்கள் பேக் பேக்கை எடுத்துக்கொண்டு குலாரா நோக்கி விரைந்தோம்.


          குவாரி பாஸ் வந்துவிட்டது என் பின்னே யாரும் வரவில்லை. நான் மட்டும் தனியாக போய்க்கொண்டிருக்கிறேன்( மகி மற்றும் ஜித்து பின்தங்கியதால் சோணமும் செயின்சிங்கும் அவர்களுக்காக காத்திருந்தார் என பிறகு தெரிந்தது)பனிப்புயல் நாங்கள் போகும் பாதையில் அடிப்பதால் திரும்பிப் பார்க்க முடியவில்லை வந்த பாதை நினைவில் இருந்தாலும் பனிமழை மற்றும் காற்றின் வேகத்தில் பாதை அவ்வளவாக தெரியவில்லை. வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டதால் எனக்கு என்ன ஆனது என பயந்து போய் இருப்பார்கள், காத்திருப்பதே நல்லது என யோசித்தேன். மேலும் சில அடி சென்றதும் வலது புறம் இருந்த பச்சை செடி புதர்களுக்கு அடியில் Sleeping mate ஐ உபயோகப்படுத்தி பனி தாக்காதவாறு மறைந்து காத்திருக்க ஆரம்பித்தேன்.  புதர் என்னை பனிபுயலில் இருந்து காப்பாற்றியது . இந்த நிமிடம்"MAN vs WILD"' பியர் கிரில்ஸ் 'நியாபகத்திற்கு வந்தார் . வாழ்க்கையில் பல விஷயங்களைக் கண்டு நான் பயந்திருக்கிறேன் ஆனால் இப்பொழுது இயற்கையை கண்டு பயந்துக்கொண்டு இருக்கிறேன். நேரம் அதிகமாக  எனக்கு நாடித்துடிப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. என் வாழ்நாளில் மறக்கமுடியாத மணித்துளிகள் இவை.

        சிறிது நேரத்தில் செயின்சிங் வந்துவிட்டார் புதர்மறைவில் இருந்து சத்தம் போட்டு அழைத்தேன். அவரும் என்னுடன் சேர்ந்து கொள்ள மற்றவர்கள் வரும் வரை காத்திருந்தோம் . கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து நாங்கள் குவாரி பாஸ்ஸை விட்டு இறங்கும்போது பனி புயல் நின்றுவிட்டது. குலாரா பேஸ்கேம்ப் வந்ததும் தான் மனம் இலேசாக இருந்தது . அவரவர் பயண அனுபவங்களை பகிர்ந்துகொண்டோம் . மோகன் இரவிற்கு சாதம்,பருப்பு மற்றும் குலாப் செய்திருந்தார்.நாளை ஆலி(Auli) வழியாக ஜோஷிமத் போகும் பிளானை கேன்சல் செய்துவிட்டோம். திரும்ப  பனிக்குள் நடக்கவும் பனிபுயலை பார்க்கவும் விருப்பமில்லை.

மே2.





இது மலையேற்றத்தின் கடைசி நாள்.  நாங்கள் காலை உணவுடனே பயணத்தை ஆரம்பித்துவிட்டோம். ஏனெனில் இது ஒரு நீண்ட நடை பயணம்  பெரும்பாலும் கீழ்நோக்கி இருந்தது.பல சிறிய குளிர்ந்த நீரோடைகள் , பறவைகள் மற்றும் காடுகளைத் தாண்டி ஒரு சீரற்ற பாதையில் கர்ச்சியை அடைந்தோம், அங்கு எங்கள் ஜீப் எங்களை மீண்டும் ஜோஷிமத்துக்கு அழைத்துச் செல்ல காத்திருந்தது.

          குவாரி பாஸ் மற்றும் பங்கர்சுலா பீக் ஒரு எளிதான மலையேற்றமாகும். முதல் மலையேற்றம் செய்யும் டிரக்கர்ஸ் மற்றும் மலையேற்றத்தை விரும்பும் எவருக்கும் இதை நான் பரிந்துரைக்கிறேன்.

 நகர்ப்புற வாழ்க்கையிள் நமக்கு இருக்கும் இந்த உடல் கஷ்டங்கள் எளிதல்ல,மனரீதியாகவும் இது நம்மை பின்னடைய செய்யும் ..

     1.   நீங்கள் எவ்வளவு விரும்பினாலும், ஒரு முறை உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால்  விட்டு விடுங்கள்.உங்களால் முடியும் என்றால் மட்டுமே தயாரகுங்கள்.

     2.  மனம் அலைந்து திரியும் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் உங்களுடைய ஒவ்வொரு நம்பிக்கையையும் சில நொடிகளில் அரிக்கக்கூடும். அப்போதெல்லாம் மனம் தளராதிர்.

     3.பொருட்கள் - உருவகமாகவும், உடல் ரீதியாகவும் உங்களால் முடிந்த அனைத்தையும் கொட்டவும். நீங்கள் எடுத்துச் செல்லும் பெரும்பாலான விஷயங்கள் உங்களுக்குத் தேவையில்லை.
     
     4.நீங்கள் அனைத்து பொருட்களுடன்  நன்கு
தயாராக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம், ஆனாலும் சில நேரத்தில் நல்ல (brand- things ) தயாரிப்புகள் தேவைப்படும் நேரத்தில் உங்களுக்கு உதவாது. 

                        உத்தர்காண்ட் பயணம் முடிந்தது.

Tuesday, 30 April 2019

உத்தரகாண்ட் ( Kuari pass & pangarchulla peak ) trek - part 3



        காலை 5.50 மணி சோனமும் ஜித்துவும் மேலும் கொஞ்ச நேரம் தூங்குவதாக கூறியதால்,
நானும் மகியும் சன் ரைஸ் பார்க்க கிளம்பினோம்.

நாங்கள் செல்வதற்குள் சூரியன் வெளியே வந்துவிட்டான்.ஒன்றரை மணி நேரம் போனது கூட தெரியாமல் அங்கேயே உட்கார்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்.கீழிருந்து chainsingh கையசைக்க கேம்ப்புக்கு திரும்பினோம்.அங்கே முந்தய நாள் நாங்கள் பார்த்த மலை நாய் எங்கள் டென்டை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தது.அதற்கு ஒரு paratha வை கொடுக்க, சாப்பிட்டது .

சிறிது நேரம் அதனுடன் பேசித் திரும்ப, காலை உணவுடன் தயாராக இருந்தாள் சோனம்.
சாப்பிட்டுவிட்டு மற்ற இரு நாளுக்கான உடமைகள் ஸ்லிப்பிங் பேக்,ஸ்லீப்பிங் மேட் எனஅனைத்தையும் பேக் செய்து,கிளைம்பிங் வாட்டர்ப்ரூப் gaiters அணிந்து கிளம்ப மணி 11 ஆகியிருந்தது.

காலை உணவு

Ready to trek

          பதினைந்து நிமிட மலையேற்றத்திற்கு பிறகு, முதல் பனி மலையேற்றம்.முதலில் chainsingh மற்றும் சோனம் முன்னே செல்ல, பின்னே நான் ஜித்து , மகியென ஒவ்வொருவராக பின் தொடர்ந்தோம்.இரண்டு அடி எடுத்து வைக்கும் முன்னரே கால்கள் சறுக்கி கீழே இழுத்தது.கையை ஊண்றி எழ , மீண்டும் சறுக்கல் என் மூன்றாவது சறுக்கலுக்கு முன் chainsingh வந்து உதவினார்.நான் இரண்டடி மேலே செல்வதற்குள் ஜித்துவிற்கு சறுக்கியது.
அவர் ஆரம்பித்த இடத்துக்கே சென்றுவிட்டார்.இப்படியே ஒவ்வொருவராக சிறிது ஓய்வெடுத்து விட்டு மீண்டும் பனி பாதையில்  நடக்க ஆரம்பித்தோம்.

முதல் சறுக்கல்

       மலையேற்றம் முழுவதும் காட்சிகள் வியக்கத்தக்கவையாக இருந்தன.இந்த பயணத்தின்போது கர்வால் ஹிமாலயஸ்-கமட் (7756 மீ), நந்த தேவி (இந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்-7816 மீ), துரோணகிரி ,திரிஷுல் (7120 மீ), சௌகாம்பா (7128 மீ),மற்றும் நீல்காந்த் (6500 மீ)உட்பட இந்தியாவின் மிக உயர்ந்த சிகரங்களை நீங்கள் காணலாம்.ஆனால் இப்போது வரை அனைத்தும் எனக்கு நம்பமுடியாததாகவே இருக்கிறது. இரண்டு மணி நேர பனி மலையேற்றத்திற்கு பிறகு, பனி மூடிய மலைகள் இப்போது மிகவும் நெருக்கமாக இருந்தன.



        செங்குத்தான மலைபாதையின் அடர்ந்த பனியில் எனது கால் 3 அடி கிழே சென்றது .25 வருட காலத்தில் (கோடை )இல்லாத அளவிற்கு இந்த வருடம் பனி இருக்கிறது, நீங்கள் அதிர்ஷ்டசாலி
முதல் இமயமலை பயணத்திலே நீங்கள் இதை பார்க்கிறீர்கள் என்றார் chainsingh . எங்களுக்கு எதிராக வலுவான காற்றடிக்க நடப்பது கடினமாக இருந்தது.

Kuari pass

        இலக்கையடைய நாங்கள் கிட்டதட்ட 50 நிமிடம் எடுத்துக்கொண்டோம்.ஆனால் மோகன் இரவு தங்குவதற்கான டென்ட் , ஸ்டவ் மற்றும் சமைப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு எங்களுக்கு முன்னே வெகுதொலைவில் சென்றுக்கொண்டிருந்தார்.  இப்பொழுது ஒரு புறத்தில் 60 டிகிரிசெங்குத்தாகவும் மறுபுறத்தில் 80 டிகிரி செங்குத்தாகவும் பனி நிரம்பிய பள்ளத்தாக்கின் நடுவில் ஒருவர் மட்டும் நடக்ககூடிய ரிட்ஜ்லில்(Ridge) நடந்துக் கொண்டிருக்கிறோம்.





    ஊதா நிற ஹிமாலயன் பூக்கள் ஆங்காங்கே ஒரே குடும்பமாய் சிரித்துக்கொண்டிருந்தன.அவற்றை கோட்கமலேயே அவற்றுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.வழியெங்கும் ஆங்காங்கே சிறிய பெரிய பாறைகள்,அதைத் தாண்டி நடக்க சிரமமாக இருந்தது.3 மணி இருக்கலாம், மதிய உணவை உலர்ந்த புல் கொண்ட ஒரு பகுதியை கண்டுபிடித்து அங்கே உட்கார்ந்து சாப்பிட முடிவெடுத்தோம்.சாப்பிட்டுவிட்டு மீண்டும் நடக்க பனிமலை ஆரம்பமானது.



       இப்பொழுது பனிமலை சரிவில் பக்கவாட்டில் நடக்க வேண்டும்.முன்பை விட கடினமான பயணம்.
மலை ஏற்றத்தை விட பக்கவாட்டில் நடப்பது மிகவும் ஆபத்தானதாக தோன்றியது. ஒரு அடி வழுக்கினாலும் பள்ளத்தாக்கில் விழவேண்டியதுதான்.
          மாலை 4.30 மணிக்கு பங்கர்சுலா பேஸ் கேம்பை அடைந்தபோது காற்று பலமாகஅடித்துக்கொண்டிருந்தது.அதற்குள் மோகன் டென்ட் அமைத்து அதன் அருகில் ஸ்லீப்பிங் மேட்டை மறைத்து சிறிய தற்காலிக கிச்சனை உருவாக்கி இருந்தார்.சூரியன் தொடுவானத்தில் மேகத்திற்குள் ஒளிந்து ஒளிச்சிதறலாய் தெரிந்தான். அதை ரசித்துக்கொண்டே Maggi தயாராக, சாப்பிட்டுடோம்.சூரியன் இளஞ்சிவப்பாகி  கண்களுக்குப் புலப்படாமல் மறையத் தொடங்கினான்.அன்றைய  சூரிய அஸ்தமனம் எங்களுக்கு புதிய உணர்ச்சியும் , காட்சிகளையும் வாரிக்கொடுத்தது .



           வடக்கு -தெற்கு ரிட்ஜ்லில் (Ridge) எங்களது டென்ட் அமைந்திருந்தது. ஒருபுறம் நாங்கள் நடந்து வந்த பனி மலை, மறுபுறம் மிகப் பெரிய பள்ளத்தாக்கு. அங்கிருந்து பார்க்கும் பொழுது பங்கர்சுலா மிக அருகில் காட்சியளித்தது.எதிர்புறம் இமயமலை தொடரின் சிகரங்கள். 'நாங்களும் உயரம் தான்...நாங்களும் அழகு தான்...' என கண்களுக்கு காட்சிகளை பரிசாக தந்தது.வெகு நேரம் போனதே தெரியவில்லை.

Sunset




         காற்றின் வேகம் அதிகமானதால் மோகனின் தற்காலிக கிட்சன் பிரிய ஆரம்பித்து அடுப்பும் அணைந்தது.பின்னர் அவரது சமையலறையை அமைப்பதற்கு ஒரு பெரிய பாறையின் கீழ் ஒரு இடத்தை கண்டுபிடித்தார். இரவு ஆரம்பித்ததும் குளிர் -10° தொட்டது. காற்று கடுமையானது மற்றும் மேகங்கள் இருட்டின.
           நாளை விடியும்முன் 2.30 மணிக்கெல்லாம் கிளம்பவேண்டும் என chainsingh  சொன்னதால்  இரவு உணவிற்கு பின்னர் டேபேக்கில் 3 லிட்டர் தண்ணீர் ,ரெயின்கோட் , நள்ளிரவில் பயணம் மேற்கொள்வதால் ஹெட் டார்ச் மற்றும் சில முக்கியமான பொருட்களை மட்டும் எடுத்து வைத்துகொண்டு தூங்க சென்றோம் . இரவு முழுவதும் இடி மின்னல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
       குளிர் -6 ° தொட்டிருந்தது.காற்றின் வேகம்  மிகஅதிகமாக இருந்ததால் காற்றில் டென்ட் பறந்து விடுமோ என்ற பயத்திலேயே உறங்கினோன்

                                         ~தீரா தேடல் தொடரும்...,