Friday, 3 May 2019

உத்தரகாண்ட் ( Kuari pass & pangarchulla peak ) trek - part 4(The End)



      நான் எழும் முன்னரே அனைவரும் எழுந்து இருந்தனர்.ஸ்லீப்பிங் பேகில் இருந்தபடியே மணி ரெண்டு ஆகிருச்சா சோனம்??? என்றேன்.
சிரித்தவள் மணி ஒன்பது ஆச்சு என்றாள்.
அய்யோ நாம ரெண்டு மணிக்கெல்லாம் கிளம்பிருக்கனுமில்ல??? ஏன் இன்னும் கிளம்பல??

வெளிய பனி மழை பேஞ்சுட்ருக்கு, வழி எதுவும் தெரியல, பங்கர்சுவாலாவை கூட காணல..

பனி மழையா? நிஜமாவா??

ஆமா... மோகனோட பாறை கிச்சனை கூட காணல...




மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தேன்...மூச்சு விட மறந்து விட்டேன். கூடாரத்தின் வெளியே பனி  3 inch அளவிற்கு நிரம்பிருந்தது,கருமேகங்கள் சூழ பனி மழை பொழிந்து கொண்டிருந்தது.
பனிமேல் நின்று உரக்க கத்தினேன், அதற்குள் காபி வர பனியில் நனைந்து கொண்டே காபி குடித்தேன்.
சொர்க்கம் இப்படித்தான் இருக்குமென நினைத்துக்கொண்டேன். சிறிது நேரம்தான் சூரியக்கதிர்கள் வெளிவர ஆரம்பித்தன. பயணத்தை தொடரலாம் என எண்ணுவதற்குள் மறுபடியும் பனிமழை ஆரம்பித்தது .மின்னல்களும் அவ்வப்போது எட்டிப்பார்க்க பயணம் தடைபட்டது . இப்படியே ஐந்து நிமிடத்திற்கொரு முறை காலநிலை மோசமாகிக்கொண்டே வந்தது.



         
       Chainsingh குலரா முகாமிற்கு  நாங்கள் திரும்ப வேண்டும்  என்று கூறினார்.இவ்வளவு தூரம் வந்து சப்மிட்டை நெருங்காமல் திரும்பி செல்வது சங்கடமாக இருந்தது எங்கள் சோக முகங்களை பார்த்து, 10 அல்லது 11 மணி வரை வானிலை பார்க்கலாம் என்றார்.மணி 9 இருக்கும் வானம் முற்றிலும் தெளிவாக இல்லை ஆனால் மின்னல் நின்றிருந்தன பனிமழையும் இல்லை காற்றின் வேகமும் வெகுவாக குறைந்திருந்தது.நாங்கள் இந்த சந்தர்ப்பத்தை விடுவதாக இல்லை .சப்மிட்டை பார்க்க கிளம்பிவிட்டோம்.



        மணி 9.35... பிரட் , சிப்ஸ், முட்டை மற்றும் ஆப்பில் வைத்து முதல் நாள் இரவு பேக் செய்திருந்த டேபேக்கை மட்டும் எடுத்துக் கொண்டோம் . மற்றும் இதர உடமைகளை பேக்பேக்கில் வைத்துவிட்டு கிளம்பினோம். பனியில் உறைந்து போகாமல் இருக்க கிளவுஸ் உபயோகப்படுத்தினேன்.பங்கர்சுலா எங்களுக்கு இடதுபக்கம் தெரிந்தது. ஒருபுறம் சரிவு மறுபுறம் பள்ளத்தாக்கு நடுவில் உலர்ந்த புல் பாதையில் ஏறிக்கொண்டிருந்தோம். மேலே செல்ல செல்ல குளிர் காற்று அடிக்க ஆரம்பித்தது நாங்கள் செல்லும் திசையில் எதிர் காற்று அடித்ததால் நடப்பதற்கு கொஞ்சம் இலகுவாகும் பயமாகவும்  இருந்தது .

           இரண்டு  மூன்று ரிட்ஜ்களை கடந்து ஒரு இடத்தில் காலை உணவை எடுத்துக் கொண்டோம் .அங்கிருந்து பார்பதற்கு எதிர்புறம் உள்ள மலைகளின் அழகு நம் மனதில்  மகிழ்ச்சியை கரை புரண்டோட செய்கிறது. இடதுபுறம் முதல்நாள் கடந்து வந்த குவாரி பாஸ் பனி நிறைந்திருந்தது . எங்கள் மலையேற்றம் தொடர்ந்துகொண்டிருந்தது..மிதந்து செல்லும் நீலவானமும் , வெள்ளை மேகமும் தன் அழகிய காட்சிகளால் கண்களை குளிர்வித்தது .



     
         
 1 1/2 மணி நேரத்திற்கு பிறகு மினி பங்கர்சுலாவை கடந்து பங்கர்சுலாவை நோக்கி நடந்தோம். மிகவும் செங்குத்தான பனிமலையில் பக்கவாட்டில் கடினமான பனியில் நடந்துகொண்டிருந்தோம் .ஒவ்வொரு அடியையும் ஒரு பள்ளத்தை உருவாக்கி அதில் பேலன்ஸ் செய்து நடந்தோம்.எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்த ஜித்து திடீரென பனியில் கால்தவறி சரிந்தார்.அவருக்கு எதுவும் ஆகவில்லை நன்றாக இருக்கிறார் என்று தெரிந்த பிறகு பனி மலையின் மேல் பகுதியில் கூடுதல் கவனத்துடன் நடக்க ஆரம்பித்தோம் . அவர் அடிபகுதியிலிருந்து முன்னேறிக்கொண்டிருந்தார் .


          ஓர் இடத்தில் ஜித்து எங்களுடன் இனைந்தார் . அது பங்கர்சுலாவின் அடிபகுதி .இன்னும் ஒரு சில மணி நேரங்களில் பங்கர்சுலாவின் சப்மிட் செய்துவிடுவோம் . மதிய உணவை (எக் ,ஜூஸ் மற்றும் ஆப்பிள் )முடித்துவிட்டு எங்களது இலக்கின் கடைசி பனிமலை பங்கர்சுலாவின் உச்சியை அடைய முடிவெடுத்தோம்.


          சாப்பிட ஆரம்பித்து ஒரு சில மணித்துளிகளில் மேகம் எங்களை சூழ்ந்தது. திடீரென்று ஏற்பட்ட மாற்றத்தால் செய்வதறியாது திகைத்து நின்றோம் .சூரியன் மறைந்து விட்டான், கருமேகங்களுக்குள் லேசான பனி தூறல் ஆரம்பித்தது. இனிமையான வானிலை விடைபெற்றது.


              Chainsingh பனிபுயல் ஆரம்பித்துவிடும் இனிமேல் சப்மிட் செய்ய இயலாது நாம் குலாரா பேஸ்கோம்ப் திரும்ப வேண்டும் என்றார். யாருக்கும் மனமில்லை , இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது பங்கர்சுலாவின் முகடு கண்முன்னே... ஆனால் இயற்கையின் முடிவு வேறாக இருந்தது .எல்லா நண்பர்களிடமும் ஒரு இனிமையான உணர்வு இல்லை. நாங்கள் தொடர்ந்து முன்னேற முயற்சித்தோம்,  கிராம்பன்ஸ் வரவில்லை நாங்கள் உடல் ரீதியாக தயாராக இருந்தோம், ஆனால் இயற்கை இல்லை.
அதற்குள் எங்கள் வலது கன்னத்தில் பனியின் ஒரு அடுக்கு உருவாகி இருப்பதை உணர முடிந்தது.நிறைய எண்ணங்கள் எங்கள் மனதில் ஓடியது ,Chainsingh முடிவு எடுத்துவிட்டார் கிளம்ப வேண்டும் அதுவும் மிக வேகமாக.  அதற்குமேல் செயின்சிங்கிடம் கேள்வி கேட்க விரும்பவில்லை. வானிலை மேலும் எந்த வாய்ப்பையும் காட்டவில்லை .கடைசியில் நாங்கள் செய்ததெல்லாம் பனியை ஆழமாக வெறித்துப் பார்த்துவிட்டு கிளம்பியது தான்.


          சில நேரங்களில் இயற்கையானது நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத விபத்துகளை ஏற்படுத்தலாம் . Chainsingh ரெயின் கோட்டை உபயோகப்படுத்த சொன்னார். ரெயின் கோட் மாட்ட போராடினேன். கடுமையான காற்று எங்களை பின்னால் இருந்து தள்ளிவிட்டது, நாங்கள் ஓட வேண்டும், சரிய வேண்டும், கீழ்நோக்கி உருள வேண்டும் என்றார் .செயின்சிங எங்களுக்கு (Sliding ) ஸ்லைடிங் பண்ண கற்றுக்கொடுத்தார் . முதலாவதாக செயின்சிங் என்னை பற்றி யோசித்தார், என்னால் தனியாக ஸ்லைடிங் பண்ணமுடியும் என்றேன்.அவர் பதிலுக்கு காத்திருக்கவில்லை என்னுடைய முதல் ஸ்லைடிங்கை ஆரம்பித்தேன்.


         இந்த பனி ஸ்லைடிங் தீம் பூங்காக்களிள் குழந்தைகள் ஸ்லைடு பண்ணுவதை நினைவுபடுத்தியது .ஒரு பெரிய 400-500 மீட்டர் பனிமலையின் கீழே சறுக்கி செல்ல வேண்டியிருந்தது. இது போல் நாங்கள் இரண்டுநாட்களாக கடந்த அனைத்து பனிமலைகளையும் சறுக்கி கடக்க ஆரம்பித்தோம். பங்கர்சுலா வெகு விரைவாக பின்னே சென்றது .முந்தைய நாள் இருந்த பங்கர்சுலா பேஸ்கேம்பிற்கு வந்து எங்கள் பேக் பேக்கை எடுத்துக்கொண்டு குலாரா நோக்கி விரைந்தோம்.


          குவாரி பாஸ் வந்துவிட்டது என் பின்னே யாரும் வரவில்லை. நான் மட்டும் தனியாக போய்க்கொண்டிருக்கிறேன்( மகி மற்றும் ஜித்து பின்தங்கியதால் சோணமும் செயின்சிங்கும் அவர்களுக்காக காத்திருந்தார் என பிறகு தெரிந்தது)பனிப்புயல் நாங்கள் போகும் பாதையில் அடிப்பதால் திரும்பிப் பார்க்க முடியவில்லை வந்த பாதை நினைவில் இருந்தாலும் பனிமழை மற்றும் காற்றின் வேகத்தில் பாதை அவ்வளவாக தெரியவில்லை. வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டதால் எனக்கு என்ன ஆனது என பயந்து போய் இருப்பார்கள், காத்திருப்பதே நல்லது என யோசித்தேன். மேலும் சில அடி சென்றதும் வலது புறம் இருந்த பச்சை செடி புதர்களுக்கு அடியில் Sleeping mate ஐ உபயோகப்படுத்தி பனி தாக்காதவாறு மறைந்து காத்திருக்க ஆரம்பித்தேன்.  புதர் என்னை பனிபுயலில் இருந்து காப்பாற்றியது . இந்த நிமிடம்"MAN vs WILD"' பியர் கிரில்ஸ் 'நியாபகத்திற்கு வந்தார் . வாழ்க்கையில் பல விஷயங்களைக் கண்டு நான் பயந்திருக்கிறேன் ஆனால் இப்பொழுது இயற்கையை கண்டு பயந்துக்கொண்டு இருக்கிறேன். நேரம் அதிகமாக  எனக்கு நாடித்துடிப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. என் வாழ்நாளில் மறக்கமுடியாத மணித்துளிகள் இவை.

        சிறிது நேரத்தில் செயின்சிங் வந்துவிட்டார் புதர்மறைவில் இருந்து சத்தம் போட்டு அழைத்தேன். அவரும் என்னுடன் சேர்ந்து கொள்ள மற்றவர்கள் வரும் வரை காத்திருந்தோம் . கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து நாங்கள் குவாரி பாஸ்ஸை விட்டு இறங்கும்போது பனி புயல் நின்றுவிட்டது. குலாரா பேஸ்கேம்ப் வந்ததும் தான் மனம் இலேசாக இருந்தது . அவரவர் பயண அனுபவங்களை பகிர்ந்துகொண்டோம் . மோகன் இரவிற்கு சாதம்,பருப்பு மற்றும் குலாப் செய்திருந்தார்.நாளை ஆலி(Auli) வழியாக ஜோஷிமத் போகும் பிளானை கேன்சல் செய்துவிட்டோம். திரும்ப  பனிக்குள் நடக்கவும் பனிபுயலை பார்க்கவும் விருப்பமில்லை.

மே2.





இது மலையேற்றத்தின் கடைசி நாள்.  நாங்கள் காலை உணவுடனே பயணத்தை ஆரம்பித்துவிட்டோம். ஏனெனில் இது ஒரு நீண்ட நடை பயணம்  பெரும்பாலும் கீழ்நோக்கி இருந்தது.பல சிறிய குளிர்ந்த நீரோடைகள் , பறவைகள் மற்றும் காடுகளைத் தாண்டி ஒரு சீரற்ற பாதையில் கர்ச்சியை அடைந்தோம், அங்கு எங்கள் ஜீப் எங்களை மீண்டும் ஜோஷிமத்துக்கு அழைத்துச் செல்ல காத்திருந்தது.

          குவாரி பாஸ் மற்றும் பங்கர்சுலா பீக் ஒரு எளிதான மலையேற்றமாகும். முதல் மலையேற்றம் செய்யும் டிரக்கர்ஸ் மற்றும் மலையேற்றத்தை விரும்பும் எவருக்கும் இதை நான் பரிந்துரைக்கிறேன்.

 நகர்ப்புற வாழ்க்கையிள் நமக்கு இருக்கும் இந்த உடல் கஷ்டங்கள் எளிதல்ல,மனரீதியாகவும் இது நம்மை பின்னடைய செய்யும் ..

     1.   நீங்கள் எவ்வளவு விரும்பினாலும், ஒரு முறை உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால்  விட்டு விடுங்கள்.உங்களால் முடியும் என்றால் மட்டுமே தயாரகுங்கள்.

     2.  மனம் அலைந்து திரியும் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் உங்களுடைய ஒவ்வொரு நம்பிக்கையையும் சில நொடிகளில் அரிக்கக்கூடும். அப்போதெல்லாம் மனம் தளராதிர்.

     3.பொருட்கள் - உருவகமாகவும், உடல் ரீதியாகவும் உங்களால் முடிந்த அனைத்தையும் கொட்டவும். நீங்கள் எடுத்துச் செல்லும் பெரும்பாலான விஷயங்கள் உங்களுக்குத் தேவையில்லை.
     
     4.நீங்கள் அனைத்து பொருட்களுடன்  நன்கு
தயாராக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம், ஆனாலும் சில நேரத்தில் நல்ல (brand- things ) தயாரிப்புகள் தேவைப்படும் நேரத்தில் உங்களுக்கு உதவாது. 

                        உத்தர்காண்ட் பயணம் முடிந்தது.